என் மண் என் மக்கள்: வீறு நடைபயணத்தை இன்று தொடங்குகிறார் அண்ணாமலை

செய்திகள் / தமிழ்நாடு

Published: Friday, July 28 2023, 10:59:19

என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பிரம்மாண்ட நடைபயண யாத்திரையை இன்று தொடங்குகிறார். தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சிக்கு ஆதரவு திரட்டவும், பலம் சேர்க்கவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபயணம் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார். இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து இன்று தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார். ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பரந்த நிலப்பரப்பில் நாடாளுமன்ற வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமருவதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமித்ஷா, அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களை வரவேற்று விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் 100 நாட்கள் நடைபயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த நிறைவு நாளில் பிரதமர் பங்கேற்க இருக்கிறார். மேலும் இதில் பங்கேற்க வருமாறு இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இந்த நடைபயண பிரச்சாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தின் போது 11 இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த யாத்திரையின் போது விடியல முடியல மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாமலை நடைபயணம் தொடக்க விழாவில் பங்கேற்க அமித்ஷா வர உள்ளதால் ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடைபெறும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.