ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்

செய்திகள் / இந்தியா

Published: Wednesday, July 26 2023, 13:23:19

ராஜஸ்தானில் கெலாட் அரசில் பதவி வகிக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, அவர்களது ஊழல் மற்றும் குற்றச் செயல்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என, அம்மாநில அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ராஜேந்திர சிங் குதா வலியுறுத்தி உள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில காங்கிரசின் மூத்த தலைவரான ராஜேந்திர சிங் குதா, பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்தார்.ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என, சொந்த கட்சியின் அரசையே சமீபத்தில் சட்ட சபையில் விமர்சித்தார். இதையடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, நேற்று முன் தினம் சட்டசபைக்கு வந்த ராஜேந்திர சிங் குதா, கையில் வைத்திருந்த சிவப்பு டைரியை காட்டி, அதில், முதல்வர் கெலாட் மற்றும் அமைச்சர்களின் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த தகவல் இருப்பதாக கூறி,பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர், கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர சிங் குதா. கெலாட் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஊழலிலும், குற்றச் செயல்களிலும் திளைக்கின்றனர்.அவர்களது ஊழல் மற்றும் குற்றங்களை அம்பலப்படுத்தும் வகையில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றார். உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது என்பது, சட்ட விதிகளில் அனுமதிக்கப்பட்ட விவகாரம். எனவே, உடனடியாக ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்ற அவர் என்னிடமும் சோதனை நடத்தலாம் என அவர் கூறினார். மேலும் இது குறித்து குதா கூறுகையில், ''ராஜஸ்தானில் கடந்த முறை நடந்த சட்ட சபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க வைத்தவர் சச்சின் பைலட். அவரை கெலாட் ஓரம் கட்டி வைத்துள்ளார் என்றார்.