திரைப்படங்களை இணையத்தில் வெளியிட தடை: மசோதா நிறைவேற்றம்

செய்திகள் / இந்தியா

Published: Friday, July 28 2023, 12:01:49

திரைப்படங்களை திருட்டுத் தனமாக இணையத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் சினிமா துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு இதற்காக கடுமையான விதிகளுடன் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருட்டுத்தனமாக திரைப்படங்களை பிரதி எடுப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும், திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யுஏ சான்றிதழ் வழங்கும்போது, அதை வயதுவாரியாக யுஏ7+, யுஏ13+ மற்றும் யுஏ16+ என மூன்று பிரிவுகளாக வழங்கவும் இந்த சட்டத்தில் உள்ளது. விவாதத்திற்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசும்போது, திரைப்பட திருட்டு செயல்களால் திரையுலகம் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்றார்