செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று முடிவு

செய்திகள் / தமிழ்நாடு

Published: Tuesday, July 25 2023, 10:50:59

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று முடிவு எடுக்கப்படவுள்ளது. அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவை சரி என்று தீர்ப்பு அளித்தார். மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் எத்தனை நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்? என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தன் தீர்ப்பில் கூறியிருந்தார். இதன்படி இந்த ஆட்கொணர்வு வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. நீதிபதி பரதசக்கரவர்த்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணை காணொலி காட்சி மூலம் நடைபெறும். அப்போது செந்தில் பாலாஜியை எத்தனை நாட்கள் அமலாக்கத்துறையின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குவது? என்பது குறித்து இரு நீதிபதிகளும் முடிவு செய்வார்கள்.